யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை


யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
x

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார். தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் டிடிஎப் வாசன், நேற்று விலை உயர்ந்த தனது மோட்டார்சைக்கிளில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று 'வீலீங்' செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதினார். இதில் டிடிஎப் வாசன், மோட்டார்சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த டிடிஎப் வாசனை மீட்டு காஞ்சீபுரம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட போதிலும் அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரித்த பாலுசெட்டி சத்திரம் போலீசார், டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்துறை பரிந்துரை செய்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின்படி மக்களுக்கு விபரீதம் ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டிய புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story