மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் மாநகர பஸ் டிரைவரை கத்தியால் வெட்டிய வாலிபர்கள்
மோட்டார்சைக்கிளுக்கு வழிவிடாததால் மாநகர பஸ் டிரைவரை கத்தியால் வெட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் விஜில் ராஜ் (வயது 44). இவர், சென்னை மாநகர பஸ்சில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பிராட்வேயில் இருந்து மணலி நோக்கி மாநகர பஸ்சை (தடம் எண் 44) ஓட்டிச்சென்றார்.
வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி சாலையில் சென்றபோது, பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாநகர பஸ்சை முந்திச்செல்ல முயன்றனர். அவர்களுக்கு விஜில் ராஜ் வழிவிடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் தங்களுக்கு வழிவிட மாட்டியா? என்று கேட்டு கையில் இருந்த கத்தியால் டிரைவரை சரமாரியாக வெட்டினர்.
இதில் விஜில்ராஜின் தலை, முகம், கன்னம் மற்றும் தொடையில் வெட்டு விழுந்தது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்த பரத் (20), பாபு (21), தண்டவராயன் தெருவை சேர்ந்த ஹரிஷ்குமார் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாநகர பஸ்சை வழிமறித்து டிரைவரை கத்தியால் வெட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.