மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கறம்பக்குடி அருகே மரக்கிளைகளை வெட்டிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக பலியானார்.
வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நைனான்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கேசவன் (வயது 35). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கேசவன் தனது வீட்டின் அருகே உள்ள சுரேஷ் என்பவரது வீட்டின் முன் இருந்த மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் பட்டது. இதில் கேசவன் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் கேசவனை மீட்டு மழையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கேசவன் இறந்து விட்டார்.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேசவன் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மரக்கிளைகளை வெட்டிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தும் ஒளி கொடுத்தார்
கறம்பக்குடி அருகே நைனான் கொல்லையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வாலிபர் கேசவன் சமூக ஆர்வலராக இருந்துள்ளார். தன் கண்களை தானம் செய்ய போவதாக ஏற்கனவே குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கேசவன் இறந்த நிலையில் தனது கணவரின் விருப்பப்படி அவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது மனைவி பழனியம்மாள் டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கேசவனின் கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த கண்கள் பார்வைத்திறன் பறிபோனவர்களுக்கு பொருத்தப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். 2 குழந்தைகளை விட்டுவிட்டு கணவன் திடீரென உயிர் இழந்த நிலையிலும் பிறருக்கு கண்ணொளி தரும் வகையில் கணவனின் கண்களை தானமாக வழங்கிய கேசவன் மனைவி பழனியம்மாளின் செயல் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.