சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு: புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
சிகிச்சை பலனின்றி வாலிபர் இறந்ததால் அவரது உறவினர்கள் புதுக்கோட்ைட அரசு மருத்துவமனை மீது புகார் தெரிவித்ததோடு, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிபர் சாவு
மணமேல்குடி தாலுகா மணலூர் அருகே சிறுவரை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 30). இவர் சம்பவத்தன்று சிறுவரை பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை ரஞ்சித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
உறவினர்கள் போராட்டம்
மருத்துவமனையில் டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால் ரஞ்சித் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பாமல் மருத்துவமனை வளாகத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் ரஞ்சித் இறந்தது தொடர்பாக நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.