காளை முட்டியதில் வாலிபர் பலி
பொன்னமராவதி அருகே வார்ப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் உயிரிழந்தார்.
மஞ்சுவிரட்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் சூலப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து மஞ்சுவிரட்டில் காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டிப்போட்டு கொண்டு அடக்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
வாலிபர் பலி
இதில் மஞ்சுவிரட்டினை பார்க்க வந்த திருமயம் அருகே கண்ணனூர் புதுவயல் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 25) என்பவரை காளை முட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த பொன்னமராவதி போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு நிறுத்தப்பட்டது. காளை முட்டியதில் வாலிபர் ஒருவர் இறந்ததையடுத்து மஞ்சுவிரட்டை காண வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.