அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்ணைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 41). இவர் தனது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக முயற்சித்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவர் ரெயில்வே, வங்கி, மின்வாரியம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
அதை நம்பிய ரகு, தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.12 லட்சத்தை கார்த்திகேயனிடம் கொடுத்தார்.
மேலும் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.4 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரை வாங்கி கொடுத்தார்.
ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன், சொன்னது போல் ஒருவருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டு தமைறைவாகிவிட்டார்.
இதுபற்றி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரகு புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடி வந்தார்.
இ்ந்தநிலையில் சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த கார்த்திகேயனை அதிரடியாக கைது செய்தார். அவரிடம் விசாரித்த போது இதுபோல் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் வரை பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான கார்த்திகேயனை சிறையில் அடைத்தனர்.