இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி; நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது


இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி; நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
x

கிப்ட் பார்சலில் வெளிநாட்டு பணம் என்று கூறி இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளேன். சமீபத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் என்று கூறி முகமது சலீம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், எனக்கு ஒரு கிப்ட் பார்சல் அனுப்பியதாகவும் கூறினார்.

இதற்கிடையில் ஒரு பெண் என்னை தொடர்புகொண்டு, முகமது சலீம் அனுப்பிய கிப்ட் பார்சலை பெற ரூ.28 ஆயிரம் கட்டணம் செலுத்தவேண்டும் என்றார். இதை நம்பி குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு ரூ.28 ஆயிரம் அனுப்பினேன். மீண்டும் அப்பெண் என்னை தொடர்பு கொண்டு, 'பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் உள்ளது. அதற்கு அபராத கட்டணமாக ரூ.77 ஆயிரம் கட்டினால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என தெரிவித்தார்.

பல லட்சம் மோசடி

அந்த பணத்தையும் அனுப்பி வைத்தேன். தொடந்து அந்த வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்ற ரூ.1 லட்சம் கட்ட வேண்டும் என்றார். அதையும் செய்தேன். இப்படி அடுக்கடுக்காக பல லட்சங்களை ஏமாற்றி பெற்றார். அதன் பின்னர்தான் பணப்பறிப்பில் ஈடுபட்டது மோசடி கும்பல் என தெரியவந்தது. இதில், தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், டெல்லியில் பதுங்கி மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவைச் சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ (31), சிலிட்டஸ் இகேசுக்வு (23) ஆகியோரை டெல்லி சென்று இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Next Story