வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.

பெரம்பலூர்

சிறப்பு முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடந்தது.

பெயர் சேர்க்க விண்ணப்பம்

இந்த முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பம் அளித்தனர். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம், திருத்தத்திற்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ம், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-வும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-வும் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட விண்ணப்பங்களை அளித்து முன்பதிவு செய்தனர்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை ஜவுளித்துறை ஆணையரும், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலருமான வள்ளலார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி(அரியலூர்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்றும் நடக்கிறது

மேலும் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 26, 27-ந் தேதிகளிலும் நடக்கிறது. முகாமிற்கான விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ, அல்லது தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.


Next Story