விருதுநகரில் மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம்
விருதுநகரில் மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (வயது 28). இவர் அப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் வேலி அருகே சென்றபோது அதை தடுப்பதற்காக பாண்டிச்செல்வி சென்றார். அப்போது காலில் முள் குத்தியதால் தடுமாறி வேலி மீது விழுந்தார். அந்த வேலியில் மின்சாரம் பாய்ச்சி இருந்ததால் பாண்டிச்செல்வி படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் பாண்டிச்செல்வியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் தோட்ட உரிமையாளர்கள் சூலக்கரை வீர பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாயகி மற்றும் வீரபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வியின் உறவினர்கள் மின்வேலி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். சூலக்கரை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மின்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.