போதை பொருள் விற்பனை குறித்து வாட்ஸ்-அப்பில் புகார் அளிக்கலாம் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தகவல்
கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை குறித்து வாட்ஸ்-அப்பில் புகார் அளிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கஞ்சா பழக்கத்தால் தன்னிலை மறக்கும் நபர்களால், சிறு சிறு பிரச்சினைகளும், கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாவட்டத்திலேயே திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தான் அதிகளவில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையாகிறது. இதனால் தான் அங்கு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர்.
தொலைபேசி எண் அறிமுகம்
அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்க 74188 46100 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எண்ணில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பி, புகார்களை பதிவு செய்யலாம். மேலும் போதை பொருட்கள் சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் பொதுமக்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.