ஓசூரில் இலவச யோகா பயிற்சி முகாம்
பதஞ்சலி யோகா சமிதி சார்பில் ஓசூரில் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஓசூர், நவ.26-
ஓசூரில், பதஞ்சலி யோகா சமிதி தமிழ்நாடு கிளை சார்பில் ஒருங்கிணைந்த இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. ஓசூர் ரிங் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், ஹரித்வாரில் இருந்து வந்த யோகா மைய பொறுப்பாளர்கள் சுவாமி பர்மார்த் தேவ்ஜி, ஆச்சார்யா சந்திரமோகன்ஜி, பாய் சச்சின்ஜி ஆகியோர் யோகா மற்றும் ஒருங்கிணைந்த யோகா பயிற்சியை வழங்கினர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும், சுவாமி பர்மார்த் தேவ்ஜி பேசுகையில், பூரண ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம், யோகா இல்லாமல் நோய்களில் இருந்து விடுபட முடியாது, யோகா செய்பவருக்கு ஒரு போதும் நோயே வராது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், சித்தலிங்க சுவாமிகள், பதஞ்சலி யோகா சமிதி மாநில பொறுப்பாளர் பரஸ்மல் ஆகியோர் பேசினர். இதில் தலைமை விருந்தினராக, பாரத் ஸ்வாபிமான் மாநில பொறுப்பாளர் பாலசுப்ரமணியம், மகிளா பதஞ்சலி யோகா சமிதி மாநில பொறுப்பாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, யோகா பயிற்சிகளை செய்து காண்பித்த சிறுவர், சிறுமிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.