யோகாசன போட்டி
மயிலாடுதுறையில், மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடந்தது.
இதில், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியானது, 8 வயதுக்கு உட்பட்டோர் முதல் 21 வயதிற்கு உட்பட்டோர் என மொத்தம் 6 பிரிவுகளாக நடந்தது. இதில் பத்மாசனம், யோகமுத்ரா, சானுசீராசனம், சலபாசனம், வக்ராசனம், உட்கட்டாசனம், அர்த்தனுராசனம், பீடாசனம், சூர்யநமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு விதமான யோகாசனங்களை மாணவ-மாணவிகள் செய்து அசத்தினர்.
பரிசு
முன்னதாக சிறுவர்-சிறுமிகள் தனித்தனியே மற்றும் இருவராக இணைந்து பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். இதில், கார்னிகா என்னும் 8 வயது சிறுமி 2 சதுர அடி அளவுள்ள அட்டைப்பெட்டிக்குள் யோகாசனத்தை செய்து காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சுழற்கேடயங்களும் வழங்கப்பட்டன.
இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டியிலும், தொடர்ந்து அந்தமானில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்கின்றனர். இதில், யோகாசன பயிற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். முடிவில் யோகா மாஸ்டர் அருள்செல்வி நன்றி கூறினார்.