சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிகளுக்கு எழுத்துத்தேர்வு
சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு இன்று 4 மையங்களில் நடைபெறுகிறது என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு இன்று 4 மையங்களில் நடைபெறுகிறது என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
எழுத்துத்தேர்வு
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 2023-ம் ஆண்டிற்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த எழுத்துத்தேர்வு இன்று நடைபெற உள்ளது.
இந்த தேர்வு 4 மையங்களில் நடைபெற உள்ள நிலையில் 6,030 பேர் தேர்வு எழுத உள்ளனர். விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் 917 பெண் விண்ணப்பதாரர்களும், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 440 பெண் விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 3,000 ஆண் விண்ணப்பதாரர்களும், சிவகாசி செவல்பட்டி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் 1,673 ஆண் விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 4 மையங்களில் 6,030 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த 4 தேர்வு மையங்களிலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் உரிய ஏற்பாடுகளும், 900 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இணைய தளம்
மேலும் 9.45 மணிக்கு மேல் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கருப்பு மற்றும் ஊதா கலர் மை பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும்.
எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் தேர்வு மையத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வு மைய நுழைவுச்சீட்டை அதற்கான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.