மல்யுத்த வீரர்கள் போராட்டம்: "மோடி அரசே, நீதியைக் கொல்லாதே" - திருமாவளவன் டுவீட்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
சென்னை,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய பகுதியையும் அப்புறப்படுத்தினர். மேலும், மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர்.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குரல் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண்சிங் -ஐ கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே! குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாதுகாத்திட முயற்சிக்காதே!" என்று தெரிவித்துள்ளார்.