கடவுள் வேடம் அணிந்து பக்தர்கள் வழிபாடு
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் கடவுள் வேடம் அணிந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அய்யலூர் அருகே கல்பட்டியில் செல்வ விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் தொடக்க நாளான நேற்று கரகம் எடுத்தும், மின் அலங்காரத்தில் கரகாட்டம், மயிலாட்டம் காவடியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடனும், பூஞ்சோலையில் இருந்து சாமிகளை கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்தநிலையில் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர். பின்னர் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடுகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் விநாயகர், சிவன், கருப்பசாமி உள்ளிட்ட கடவுள்களின் வேடம் அணிந்து பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர். திருவிழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் பால்குடம், காவடி, முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து, சாமிகளை ஊர்வலமாக பூஞ்சோலைக்கு அழைத்து செல்வதுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.