ஆடிப்பெருக்கையொட்டிகிருஷ்ணகிரி அணையில் குவிந்த பொதுமக்கள்புனிதநீராடி வழிபாடு நடத்தினர்


ஆடிப்பெருக்கையொட்டிகிருஷ்ணகிரி அணையில் குவிந்த பொதுமக்கள்புனிதநீராடி வழிபாடு நடத்தினர்
x
தினத்தந்தி 3 Aug 2023 7:30 PM GMT (Updated: 3 Aug 2023 7:31 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ஆடிப்பெருக்கையொட்டி கிருஷ்ணகிரி அணையில் குவிந்த பொதுமக்கள் புனிதநீராடி வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கு விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் தொடங்கியது முதல் மாரியம்மன் கோவில்களில் ஆடி விழா நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கு அன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பதோடு, நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமண தம்பதிகள் நீர்நிலைகளில் கூடி தாலி மாற்றி இறைவனை வழிபடுவார்கள்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே மஞ்சமேடு, மத்தூர் அருகே சேக்கனாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே வலசகவுண்டனூர், வேப்பனஅள்ளி அருகே தீர்த்தம், ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பேய் விரட்டும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அணையில் சாமி வீதி உலா நடந்தது. கிருஷ்ணகிரி அணையில் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர்.

அவர்களில் பலர் அணை அருகில் மார்கண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியில் இருந்து வரும் தண்ணீரிலும், ஆற்றிலும் குளித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதையொட்டி பேய் விரட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து கொண்டனர். அப்போது கோவில் பூசாரி சாட்டையால் அவர்களுடைய கைகளில் அடித்தார்.

சிறப்பு பஸ்கள்

ஆடிப்பெருக்கையொட்டி போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிருஷ்ணகிரி நகரில் இருந்து அணைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. ஆடிப்பெருக்கையொட்டி பெரும்பாலான பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இதனால் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லங்களில் ஏராளமானவர்கள் வந்தனர். குழந்தைகள் பூங்காவில் உள்ள ஊஞ்சலிலும், சறுக்கிலும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் படகு சவாரியும் செய்தனர்.


Next Story