உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை நேற்று சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளித்தனர்.
மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் நேற்று உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்பட்டது. உலக பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த வித நுழைவு கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்து இருந்தது.
இலவச அனுமதி வழங்கியும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக கொளுத்தும் வெயில், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகள் போன்றவற்றால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளே நேற்று கடற்கரை கோவில் வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் போன்ற புராதன சின்னங்களில் இலவசமாக கண்டுகளித்து, சுற்றி பார்த்ததை காண முடிந்தது.
குறிப்பாக இலவச அனுமதியால் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நுழைவு கட்டண கவுண்ட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இணையதளம் நுழைவு சீட்டு பெறும் ஆன்லைன் செயலியும் நேற்று இயங்கவில்லை.
குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 600-ம் உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது.
இலவச அனுமதி என்றாலும் நேற்று வாட்டி வதைத்த கடும் வெயில் காரணமாக வெளிநாட்டு பயணிகள் பலர் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளின் அறைகளிலேயே மூடங்கி கிடந்தனர்.