உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற அக்டோபர் 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்று கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு நாட்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிகின்றனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துகின்றனர்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பல லட்சம் பகத்ர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.