பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்ல உலக தரம் வாய்ந்த பயிற்சி; திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்ல உலக தரம் வாய்ந்த பயிற்சி; திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்ல உலக தரம் வாய்ந்த பயிற்சி அளிப்பதற்கு திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.

வரவேற்பு

விமானநிலையத்தில் இருந்து விழா நடைெபற்ற திருச்சி அண்ணா விளையாட்டு மைதானம் வரை வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காலை 10.10 மணிக்கு விழா பந்தலுக்கு வந்த முதல்-அமைச்சர், அங்கு அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

நலத்திட்டங்கள்

விழாவில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் ரூ.238 கோடியே 41 லட்சம் செலவில் 5,635 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.308 கோடியே 29 லட்சம் செலவில் 5,951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 22 ஆயிரத்து 716 பயனாளிகளுக்கு ரூ.79 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், 2,764 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்குரூ.78 கோடியில் வங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திருச்சிக்கு முக்கிய சாதனைகள்

நகராட்சி நிர்வாகத்துறை மூலம் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வரக்கூடியவர் தான் அமைச்சர் கே.என்.நேரு. அரசு நிகழ்ச்சி என்று தேதி வாங்கி அரசு சார்பான மாநாடாக இதனை ஏற்பாடு செய்து மிக எழுச்சியோடு நடத்தி கொண்டு இருக்கும் நேருவுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக மணப்பாறை தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவன 2-வது அலகை திறந்து வைக்க இருக்கிறேன். அதோடு மணப்பாறையில் சிப்காட் வளாகத்தையும் திறந்து வைக்க இருக்கிறேன். இது இரண்டும் திருச்சிக்கு முக்கியமான சாதனைகள்.

புதிய துறைகளில் முதலீடு

தமிழ்நாட்டின் தொழில்துறை மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறது. தமிழகத்தை நோக்கி புதிய தொழிற்சாலைகள் வர தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலக நிறுவனங்களும் தமிழ்நாட்டுக்கு வர தொடங்கி உள்ளது. புதிய, புதிய துறைகளில் முதலீட்டுகளை நாம் ஈர்த்து வருகிறோம்.

இந்த நிகழ்ச்சியை எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ள நேருவையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியையும் பாராட்டுகிறேன். பள்ளிக்கல்வித்துறையை இந்தியாவின் சிறந்த துறையாக ஆக்க நித்தமும் உழைத்து கொண்டு இருக்கிறார் அன்பில் மகேஷ்.

ஒலிம்பிக் அகாடமி

இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லக்கூய வாய்ப்பை ஏற்படுத்த நம் மாநில இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி சட்டமன்ற பேரவையில் நான் அறிவித்து இருந்தேன். அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

கல்வியில், வேலைவாய்ப்பில், அறிவுத்திறனில், தொழில்வளர்ச்சியில் மட்டுமல்ல, நம் தமிழ்நாடு உலகத்தோடு போட்டிப்போட வேண்டும். அதற்கான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்கு இந்த ஒலிம்பிக் அகாடமி பெரும்துணையாக இருக்கும். இது அமைச்சர் உதயநிதிக்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்தின் அமைச்சர்களாக இருக்கக்கூடிய நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்புகள் தான்.

4 லட்சத்து 38 ஆயிரம் சுயஉதவிக்குழுக்கள்

தமிழ்நாட்டில் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்களில் 50 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது இந்த அமைப்பு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நாம் அறியலாம். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என்பது மக்கள் நிறுவனமாக ஜனநாயக முறையில் செயல்பட்டு வருகின்றன. கூட்டம் நடத்துதல், சேமித்தல், உள்கடன் வழங்குதல், கடன் திரும்ப செலுத்துதல், கணக்கு பதிவேடுகளை பராமரித்தல் ஆகிய 5 நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வேண்டும்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதார தேவைகளை நிறைவு செய்யவும், வாழ்வாதார மேம்பாட்டுக்காக வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க முதன்முதலில் முனைப்பு காட்டியது தி.மு.க. ஆட்சி தான். சுயஉதவிக்குழுக்களுக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கைவிட அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 சுயஉதவிக்குழுக்கள் பெற்றுள்ளார்கள்.

கடன் வழங்க இலக்கு

2022-ம் நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 16-ந் தேதி வரை 2 லட்சத்து 60 ஆயிரத்து 589 குழுக்களுக்கு ரூ.16 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் வங்கி கடன்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த இலக்கையும் அடைந்து சாதனை படைப்போம்.

இந்த நிகழ்ச்சியில் சுயஉதவிக்குழு பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டதைபோல, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர்கள் என எல்லோரும் பங்கேற்கும் வகையில் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவி வழங்கப்படும்.

திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்

இது தொடக்கம் தான். இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழர்களையும், தமிழ்நாட்டையும் செழிக்கவைப்பதே திராவிடமாடல் ஆட்சியின் நோக்கம். இதனை தொய்வில்லாமல் செய்து வருகிறோம்.

திராவிட மாடல் ஆட்சியின் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து இருக்கிறது. காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது..

மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் போதும்

நம்பர் 1 முதல்-அமைச்சராக இருந்தாலும் சரி, நம்பர் 1 தமிழ்நாடு என்று இருந்தாலும் சரி அதற்கு உண்மையான அளவுகோல் என்ன?. ஏழைகளின் சிரிப்பும், இங்குள்ள மகளிர் மகிழ்ச்சியும் தான் அதற்கு உண்மையான அளவுகோல். மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் போதும். இதனை தான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. நான் சொல்வது ஏழையின் சிரிப்பில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதியை காண்போம் என்பது தான். மக்களின் அரசு இது, மக்களுக்கான அரசு இது. இந்த சாதனைகள் தொடரும், தொடரும், தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி, மேயர் அன்பழகன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனர் திவ்யதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா வரவேற்று பேசினார்.

முடிவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நன்றி கூறினார்.


Next Story