உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவக்கல்லூாி டீன் டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.
பின்னர் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் முன்பு டீன் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவர்கள் ஏற்றனர்.
நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், குழந்தைகள் பிரிவு தலைவர் பெருமாள், குடியிருப்பு மருத்துவ அலுவலர் அரவிந்தன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.