சீசன் முடிந்தும் பனைமரத்தில் இருந்து மண் கலயத்தை இறக்காத தொழிலாளர்கள்
சாயல்குடி அருகே கருப்பட்டிக்கு போதிய விலை இல்லாததால் பனை தொழிலாளர்கள் பனை மரத்தில் ஏற்கனவே கட்டிய கலயத்தை இறக்காமல் விட்டுள்ளனர்.
சாயல்குடி அருகே கருப்பட்டிக்கு போதிய விலை இல்லாததால் பனை தொழிலாளர்கள் பனை மரத்தில் ஏற்கனவே கட்டிய கலயத்தை இறக்காமல் விட்டுள்ளனர்.
பனை மரங்கள்
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு, நுங்கு, பனம்பழம் போன்றவற்றுக்கு எப்போதும் தனி மவுசு மற்றும் தேவையும் அதிகமாக உண்டு. அதிலும் பதநீரில் இருந்து காய்ச்சப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் மட்டுமின்றி மருத்துவ குணங்களும் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. குறிப்பாக சாயல்குடி அருகே நரிப்பையூர், மேலச்செல்வனூர், கடுகு சந்தை, சத்திரம், கன்னிராஜபுரம், மேல கிடாரம், வெட்டுக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகமாக பனை மரங்கள் உள்ளன.
மரத்தில் கலயங்கள்
இந்த கிராமங்களில் மட்டும் பனைமரத்தை நம்பி சுமார் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருப்பட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் சாயல்குடி அருகே பல கிராமங்களிலும் இந்த ஆண்டு பதநீர் சீசன் முடிவுக்கு வந்தது. மேலும் கருப்பட்டிக்கு போதிய விலை இல்லாததால் பனை தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் சீசன் முடிந்தும் கடுகு சந்தை, சத்திரம், மேலச்செல்வனூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஏற்கனவே பனை மரங்களில் கட்டி தொங்க விடப்பட்ட மண் கலயங்களை கூட கலட்டாமல் மரத்திலேயே தொங்க விட்டுள்ளனர்.
அரசு நடவடிக்கை
இது குறித்து பதநீர் காய்ச்சும் தொழிலாளி ராணி கூறியதாவது:- வியாபாரிகள் 10 கிலோ கருப்பட்டி கொண்ட பனை ஓலை சிப்பத்தை எங்களிடம் ரூ.1700-க்கு வாங்குகின்றனர். அதாவது ஒரு கிலோ ரூ.170-க்கு வாங்கி கடைகளில் ஒரு கிலோ ரூ.250-ல் இருந்து 300 வரை விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் வரை ஒரு கிலோ கருப்பட்டி ரூ.250-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 1 கிலோ கருப்பட்டி 300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சீசன் முடிவடைந்து விட்டதால் கருப்பட்டியின் விலையையும் வியாபாரிகள் உயர்த்தி விட்டனர். ஆனால் பனை தொழிலாளர்களுக்கு கருப்பட்டிக்கு நல்ல விலை கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.