கரடு, முரடான சாலையால் தொழிலாளர்கள் அவதி


கரடு, முரடான சாலையால் தொழிலாளர்கள் அவதி
x

நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதியில் கரடு, முரடான சாலையால் தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தார்சாலை அமைத்து தர வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதியில் கரடு, முரடான சாலையால் தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தார்சாலை அமைத்து தர வலியுறுத்தி உள்ளனர்.

தேயிலை தோட்ட பகுதி

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட (ரேஞ்சு-1) எழுபதெட்டு ஏரியா லைன்ஸ் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக உப்பட்டி அல்லது கொளப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் சாலை வசதி சரிவர இல்லை.

குறிப்பாக குடியிருப்பு பகுதியில் இருந்து பச்சை தேயிலையை எடை போடும் செட் உள்ள பகுதி வரை கருங்கற்கள் பதிக்கப்பட்ட சாலையே உள்ளது. இது மிகவும் பழுதடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. தார்சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அவதியடைந்து வருகின்றனர்.

தொட்டில் கட்டி...

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

கருங்கற்கள் பதிக்கப்பட்ட சாலையில் செல்லும்போது, கால் தவறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறோம். அவசர காலங்களில் வாகனங்களில் விரைவாக செல்ல முடியவில்ைல. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. இதனால் எந்த வாடகை வாகனங்களும் எங்கள் பகுதிக்கு வர முன்வருவது இல்லை. இதன் காரணமாக கர்ப்பிணிகள், நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை உள்ளது.

கோரிக்கைகள்

இது தவிர பெருங்கரை, பூதாளக்குன்னு வழியாக உப்பட்டிக்கும், புஞ்சைவயல் வழியாக உப்பட்டிக்கும் செல்லும் சாலைகள் மண்சாலைகளாகவே உள்ளன. அங்கு தார்சாலை அமைக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த மண் சாலைகளும் மழைக்காலங்களில் மிகவும் மோசமான நிலைக்கு மாறிவிடுகின்றன.

இதன் காரணமாக எங்கள் பகுதி தனித்தீவு போல காட்சியளிக்கிறது. இறந்தவர்களின் உடலை கூட தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவல நிலை நீடிக்கிறது. இந்த நிலையை போக்க எங்களின் நியாயமான கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story