வேளாண்துறை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


வேளாண்துறை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

அண்ணா பண்ணையில் தொழிலாளர்களை மீண்டும் பணிநிறுத்தம் செய்ததை கணடித்து வேளாண்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அண்ணா பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு அண்ணா பண்ணையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கடந்த ஒரு வார காலமாக திடீரென வேளாண்துறை அதிகாரிகள் வயதை காரணம் காட்டி பணி நிறுத்தம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 16-ந்தேதி குடுமியான்மலை அரசு வேளாண் பண்ணையில் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் தொழிலாளர்களை பணிக்கு வர அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அதன் பின்பு 2 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டதாகவும் மீண்டும் தங்கள் வயதை காரணம் காட்டி பணிக்கு வர வேண்டாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

இதையடுத்து நேற்று பணியில் இருந்து நிறுத்தப்பட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளோடு சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக இதே பண்ணையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த வேளாண் துறை உதவி இயக்குனர் பழனியப்பன், தாசில்தார் வெள்ளைச்சாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story