தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி
12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை. 12 மணி நேர வேலை என்பது மனித வாழ்க்கைக்கு சரிவராது. ஸ்விட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனித வாழ்க்கை. 12 மணிநேர வேலை மசோதாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது 12 மணி நேர வேலை மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; அது தான் ஸ்டாலினின் பண்பாடு.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 30 ஆயிரம் கோடி தொடர்பான அந்த ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம்.
இவ்வாறு கூறினார்.