தொழிலாளிக்கு கத்திக்குத்து
தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார்
களக்காடு:
களக்காடு சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செல்வம் (வயது 28). தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் செல்வம், தனது மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்தார். இதைப்பார்த்த ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த மரிக்கொழுந்து மகன் முப்பிடாதி (27) செல்வத்தை தட்டிக் கேட்டார். இதில் செல்வத்திற்கும், முப்பிடாதிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
நேற்று முன்தினம் இரவில் செல்வம் களக்காடு-சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முப்பிடாதிக்கும், செல்வத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முப்பிடாதி, செல்வத்தை கத்தியால் குத்தினார். பின்னர் தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முப்பிடாதியை கைது செய்தனர்.