தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை; உறவினர்கள் சாலை மறியல்


தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோட்ட தொழிலாளி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் காளியம்மன் கோவில் திடல் அருகில் உள்ள தெருவைச் சேர்ந்தவர் தெட்சனை என்ற சாமி (வயது 55). இவர் கடையநல்லூரை அடுத்த புதுக்குடி மங்களபுரம் சாலையில் உள்ள பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அந்த தோட்டத்தில் கோழி, ஆடு, மாடு பண்ணைகளும் உள்ளன. அங்குள்ள கோழிப்பண்ணையில், ஆய்க்குடி அகரகட்டு பகுதியைச் சேர்ந்த ஜோசப், அவருடைய மனைவி லில்லி ஆகியோர் தங்கியிருந்து தொழிலாளர்களாக வேலை செய்தனர். இவர்களுடைய மகன் பெஞ்சமின் (25) அடிக்கடி பெற்றோரை பார்ப்பதற்காக அந்த தோட்டத்துக்கு வந்து செல்வது வழக்கம்.

சரமாரி வெட்டிக்கொலை

நேற்று மதியம் பெஞ்சமின் வழக்கம்போல் பெற்றோரை பார்ப்பதற்காக தோட்டத்துக்கு சென்றார். பின்னர் அவரும், தோட்ட தொழிலாளி சாமியும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பெஞ்சமின் அரிவாளால் சாமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் பெஞ்சமின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, கடையநல்லூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இறந்த சாமியின் உடலைக் கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான பெஞ்சமினை வலைவீசி தேடி வருகின்றனர்.

உறவினர்கள் சாலைமறியல்

இதற்கிடையே சாமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலையாளியை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சாமியின் உறவினர்கள் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு, கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. உடனே போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இறந்த சாமிக்கு சங்காத்தாள் என்ற மனைவியும், பகவதி காளி என்ற மகனும், வேணி என்ற மகளும் உள்ளனர். கடையநல்லூரில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story