காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடல் மின்கம்பத்தில் தொங்கிய பரிதாபம் நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்


காரைக்குடி அருகே  மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடல் மின்கம்பத்தில் தொங்கிய பரிதாபம் நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 12 Aug 2023 1:15 AM IST (Updated: 12 Aug 2023 5:10 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடல் மின்கம்பத்தில் தொங்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. நிவாரணம் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி

மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடல் மின்கம்பத்தில் தொங்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. நிவாரணம் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 32.). இவர் அமராவதி புதூர் ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தெருவிளக்குகளை பராமரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அமராவதி புதூர் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது.

இது குறித்த புகாரின் பேரில் நேற்று காலை பாலகிருஷ்ணன் அப்பகுதிக்கு சென்று டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு மின்வினி யோகம் தடைபட்ட பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அருகில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் அவரது தலைபட்டு விட்டது. இதனால் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பாலகிருஷ்ணன் தலைகீழாக தொங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இது குறித்த தகவலின் பேரில் சோமநாதபுரம் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியோடு பாலகிருஷ்ணன் உடலை இறக்கினர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க முற்பட்டபோது, உறவினர்கள் பாலகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து அரசு உடனடியாக நிவாரண உதவித்தொகையினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அமராவதி புதூரில் தேவகோட்டை- காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காரைக்குடி மாங்குடி எம்.எல்.ஏ., உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், தாசில்தார் தங்கமணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிவாரண உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. பாலகிருஷ்ணனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story