மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பத்தமடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் பத்தமடை சம்பந்தர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் மகன் ஷாஜகான் (வயது 45). தொழிலாளி. இவரது அண்ணன் ஒலி, ஒளி அமைக்கும் கடை நடத்தி வருகிறார். ஷாஜகான் அவரிடம் தொழிலாளியாகப் பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் பத்தமடை மருதுபாண்டியர் தெருவில் அமைந்துள்ள கோவிலில் நடைபெற்ற வருசாபிஷேக விழாவுக்காக ஷாஜகான், அவரது சகோதரர் ஆகியோர் ஒலிப்பெருக்கி மற்றும் மின்விளக்கு அலங்காரம் போன்றவற்றை செய்திருந்தனர். விழா முடிந்ததால் நேற்று காலையில் கோவிலில் கட்டியிருந்த ஒலிப்பெருக்கி மற்றும் மின்சாதனங்களை பிரிக்கும் பணியில் ஷாஜகான் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் கசிந்ததில் ஷாஜகான் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை உடனடியாக மீட்டு சேரன்மாதேவியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பத்தமடை போலீசார் ஷாஜகான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவி ரசிதா பானு அளித்த புகாரின் பேரில், பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.