மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
ராஜாக்கமங்கலம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவ நாடார் (வயது 52). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் குருந்தன்கோட்டில் உள்ள தனது சகோதரனின் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் சிவநாடார் தனது மோட்டார் சைக்கிளில் நண்பரான காரங்காடு தெற்கு ஆலன்விளை பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மிக்கேல் மகன் ஜார்ஜ் மிக்கேல் (35) என்பவரை அழைத்துக் கொண்டு நாகர்கோவில் சென்றனர். பின்னர், அவர்கள் ஊர் திரும்புவதற்காக பாம்பன்விளை வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாம்பன்விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே, அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவ நாடார் பரிதாபமாக இறந்தார். ஜார்ஜ் மிக்கேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவ நாடாரின் சகோதரர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---