ஏரல் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை:சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்த 3 வாலிபர்கள் கைது


தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 1:22 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

தூத்துக்குடி

தொழிலாளி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அகரம் நடு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவருைடய மகன் அஜித்குமார் (வயது 24). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவில் நண்பரான தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த ஜெபச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

ஏரல் அருகே மாரமங்கலம் பிள்ளையார் கோவில் அருகில் சென்றபோது, அங்கு மறைந்து இருந்த மர்மநபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிய அஜித்குமாரை மர்மநபர்கள் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

மதுபாட்டிலால் தாக்கி...

ஏரல் அருகே அகரம் கோவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் சரவணகுமார். இவர் சென்னையில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் அஜித்குமாரும் வேலை செய்தார். இதனால் அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சரவணகுமாரும், அஜித்குமாரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் மதுபாட்டிலால் சரவணகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சரவணகுமார் இறந்தார். இதுகுறித்து சென்னை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

பழிக்குப்பழியாக...

பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அஜித்குமார் தனது சொந்த ஊரான அகரத்துக்கு வந்தார். இங்கு கூலி வேலைக்கு சென்ற அவர் கடந்த சில நாட்களாக மாங்காய் பறிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சரவணகுமாரின் மைத்துனரான தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த துைரப்பழம் மகன் பாலமுருகன் என்ற அட்டக் (வயது 36) என்பவர் பழிக்குப்பழியாக நண்பர்களுடன் சேர்ந்து அஜித்குமாரை தீர்த்துக்கட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து பாலமுருகன், அவருடைய நண்பர்களான தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிசெல்வம் (19), கோவங்காடு வடக்கு தெருவை சேர்ந்த ராஜன் மகன் அய்யன்ராஜ் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான பாலமுருகன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், 'எனது மனைவியின் தம்பியான சரவணகுமாரை அஜித்குமார் மதுபாட்டிலால் தாக்கி கொன்றதால், பழிக்குப்பழியாக நண்பர்களுடன் சேர்ந்து அஜித்குமாரை தீர்த்துக்கட்டினேன்' என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான பாலமுருகன், மாரிசெல்வம், அய்யன்ராஜ் ஆகிய 3 பேரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 3 அரிவாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் நடந்த கொலைக்கு தொழிலாளியை பழி தீர்த்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story