பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

கும்மிடிப்பூண்டி அருகே மகளின் விருப்பத்தை நிறைவேற்ற பனை ஏறிய தொழிலாளி தவறி விழுந்து செத்தார்.

திருவள்ளூர்

தஞ்சாவூரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி பூமிநாதன் (வயது 55). திருமணமான இவருக்கு பூமாதேவி என்ற மகள் உள்ளார். பூமாதேவிக்கு கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணமானது.

இந்தநிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பூமாதேவி நுங்கு சாப்பிட ஆசைப்பட்டார். அதனை அறிந்த பூமிநாதன் தனது மகளின் ஆசையை நிறைவேற்ற முயன்றார்.

அதன்படி மகள் வீட்டின் முன்பு இருந்த பனைமரத்தில் ஏறினார். பின்னர் மரத்தில் காய்ந்து தொங்கிய நுங்குகளை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்து பூமாதேவி கதறி துடித்தார். சம்பவம் அறிந்து அருகில் இருந்தவர்களை காயமடைந்த பூமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த பூமிநாதனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பூமிநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் ஆசையை நிறைவேற்ற பனைமரம் ஏறிய தந்தை கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story