குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே உள்ள செக்குமூடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 44), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசனின் மனைவி மகள்களுடன் தனியாக சென்று வசித்து வருகிறார். இதனால் கணேசன் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் கணேசன் தனது நண்பர்கள் 2 பேருடன் மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றார்.
கணேசன் ஏற்கனவே குளத்துக்குள் வலை போட்டிருந்தார். மேலும், வலையில் சிக்கிய மீன்களை யாரும் திருடிச் சென்றுவிடாமல் இருக்க அவர் நண்பர்களுடன் கரையில் இருந்தார். சிறிது நேரத்தில் நண்பர்கள் 2 பேரும் தூங்கி விட்டனர். நேற்று காலையில் நண்பர்கள் எழுந்து பார்த்தபோது கரையில் கணேசனின் துணிகள் இருந்தன. அவரை காணவில்லை. இதையடுத்து நண்பர்கள் இருவரும் குளத்துக்குள் இறங்கி அவரை தேடினர். ஆனாலும் கணேசன் கிடைக்கவில்லை.
பின்னர், இதுபற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்துக்குள் இறங்கி கணேசனை தேடினர். அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த கணேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நள்ளிரவில் நண்பர்கள் தூங்கியபின் வலையில் மீன்கள் சிக்கி உள்ளதா என பார்க்க குளத்துக்குள் இறங்கிய கணேசன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.