அரிசி ஆலையில் பாய்லர் விழுந்து தொழிலாளி பலி


அரிசி ஆலையில் பாய்லர் விழுந்து தொழிலாளி பலி
x

பொன்னேரி அருகே அரிசி ஆலையில் உள்ள பாய்லர் விழுந்து தொழிலாளி பலியானார்.

செங்கல்பட்டு

பொன்னேரி அருகே காட்டாவூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேல் வேக வைக்கும் பாய்லர் பழுதானது. இந்த பாய்லரை சரி செய்வதற்காக செங்குன்றத்தில் தங்கியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த படைலால் (வயது 38) என்பவர் காட்டாவூர் கிராமத்தில் உள்ள அரிசி ஆலைக்கு வந்து பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென பாய்லர் சரிந்து விழுந்ததில் படைலால் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சென்னை ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிசிச்சை பலனின்றி படைலால் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே பாண்டர வேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கைலாசம், பாலாஜி. இவர்களுக்கு சொந்தமான கிணற்றில் பழுதான மோட்டாரை கழற்றி பழுது பார்ப்பதற்காக பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் பழனி என்பவரை தொலைபேசி மூலம் அழைத்தனர். அவர் தனக்கு உதவியாக கிருஷ்ணன் (50) என்பவரை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு சென்றார். தண்ணீர் வற்றி போயிருந்த அந்த கிணற்றில் பழுதான மின்மோட்டாரை கழட்டுவதற்காக பழனியும், கிருஷ்ணனும் கிணற்றில் இறங்கினார்கள். அப்போது கிணற்றில் இருந்த ஒரு படிக்கட்டு உடைந்து விழுந்ததில் கிருஷ்ணன் கிணற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணனின் மனைவி வள்ளி (வயது 45) பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story