ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
தேனியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
தேனி ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் நேற்று ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகில் பை ஒன்று கிடந்தது. அதற்குள் ஆதார் அட்டை மற்றும் மாவட்ட மன நலத்திட்டத்தின் கீழ் மனநல சிகிச்சை பெறுவதற்கான குறிப்பேடு ஆகியவை இருந்தன. தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் வடுகபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதாகர் (வயது 47) என்பது தெரியவந்தது. அவருடைய உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள், இறந்து கிடந்தது சுதாகர் தான் என அடையாளம் காட்டினர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்த சுதாகர், ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி வந்ததாகவும், ரெயில்வே தண்டவாளம் அருகில் நடந்து சென்ற போது மதுரையில் இருந்து தேனிக்கு வந்த பயணிகள் ரெயிலில் அடிபட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.