ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற்றுநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்குபாடம் புகட்ட வேண்டும்:அமைச்சர் கீதாஜீவன் பேச்சு


ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற்றுநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்குபாடம் புகட்ட வேண்டும்:அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற்று நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற்று, பா.ஜ.க.வுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கூறினார்.

பிரதிநிதிகள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

ஒற்றுமையாக..

அப்போது, தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பா.ஜனதா பிரிவினைவாதத்தை உருவாக்கி வருகின்றனர். பா.ஜனதாவின் சூழ்ச்சிக்கு, பிரிவினைக்கு ஆளாகி வருகிறோம். பா.ஜனதா அனைத்து வகையிலும் தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. எந்த இடைஞ்சல் வந்தாலும், தொடர்ந்து பணியாற்றி 40 தொகுதிகளையும் வெற்றி பெற வேண்டும். கட்சி பூசல்களை மறந்து வெற்றிக்கு உழைக்க வேண்டும். ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற்று, பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க. மவுனமாக இருக்கிறது. அவர்கள் அடிமையாக இருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஒவ்வொரு ஒன்றியத்திலும், குறைந்தபட்சம் 5 கொடிக்கம்பங்களும், வார்டுகளில் 2 கொடிக்கம்பங்களும் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வினியோகிக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. பா.ஜனதா பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். அதனை பொதுமக்களிடம் விளக்கி கூற வேண்டும் என்று கூறினார்.

பின்னர் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு சொந்தமான இடங்களில் கருணாநிதி உருவச்சிலை அமைப்பது, வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 100 மூத்த முன்னோடிகளை தேர்வு செய்து பொற்கிழி வழங்குவது, அனைத்து கிளைகள், வார்டுகளில் புதிய கொடிக்கம்பங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story