கடல் அரிப்பை தடுப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்
விழுப்புரம் மாவட்ட கடலோர கிராமங்களில் கடல் அரிப்பை தடுப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் கடல் அரிப்பை தடுப்பதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான பாதுகாப்புக்குழு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டம் கடலோர பகுதியான பிள்ளைச்சாவடியில் 450 மீனவர்களும், எக்கியார்குப்பத்தில் 3,460 மீனவர்களும், அனுமந்தைகுப்பத்தில் 3,290 மீனவர்களும் வசித்து வரும் நிலையில், பிள்ளைச்சாவடியில் 27 மீன்பிடி படகுகளுடனும், எக்கியார்குப்பத்தில் 223 மீன்பிடி படகுகளுடனும், அனுமந்தைகுப்பத்தில் 194 மீன்பிடி படகுகளுடனும் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
கடல் அரிப்பை தடுக்கும் பணிகள்
இ்ந்த மீனவ கிராமங்களையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் காத்திடும் விதமாக கடல் அரிப்பை தடுத்தல், கடற்கரை நேர்கல் அமைப்பு, வலை பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், மீனவர்களுக்கான ஒப்பனை அறை, மீன் உலர்தளம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.24.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை போன்ற துறைகளிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டது. கருத்துருக்கள் முறையாக தமிழ்நாடு கடல்சார் மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.