வடநெம்மேலி பாம்பு பண்ணையில் சீரான வெப்பநிலையில் பாம்புகளை பராமரிக்கும் பணி தொடக்கம்


வடநெம்மேலி பாம்பு பண்ணையில் சீரான வெப்பநிலையில் பாம்புகளை பராமரிக்கும் பணி தொடக்கம்
x

குளிர்காலம் தொடங்குவதால் குளிர்ச்சியான பானை ஆபத்து விளைவிக்கும் என்பதால் வடநெம்மேலி பாம்பு பண்ணையில் வைக்கோல் போட்டு சீரான வெப்பநிலையில் பாம்புகளை பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பில் தமிழக அரசின் பாம்பு பண்ணை உள்ளது. இங்கு பார்வையாளர்கள் முன்பு கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து தினமும் விஷம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 350 பழங்குடி இருளர்கள் தமிழக அரசின் அனுமதி சான்று பெற்று விஷ பாம்புகளை பிடித்து இந்த பாம்பு பண்ணைக்கு வழங்கி வருகின்றனர்.

வட நெம்மேலி சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இருளர்கள் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வயல்வெளிகள், செடி, கொடிகள், படர்ந்த புதர்கள் உள்ள இடங்களுக்கு சென்று தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு நேரத்தில் கட்டுவிரியன் பாம்புகளையும், பகல் நேரத்தில் நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் போன்ற விஷ பாம்புகளை பிடித்து வந்து கொடுத்து அதற்குரிய தொகையை வாங்கிச் செல்வர்.

மண்பானைகளில் பராமரிக்கப்படும் இந்த கொடிய விஷ பாம்புகளில் இருந்து சுற்றுலா பயணிகள் முன்பு விஷம் எடுக்கப்படுவது வழக்கம்.

பாம்புகளிடம் இருந்து எடுக்கப்படும் விஷத்தை தமிழக அரசின் அனுமதியுடன் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மருந்து ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர். இங்கு வாங்கப்படும் பாம்பு விஷத்தில் இருந்து கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரியான வெப்ப நிலையில் இருந்தால் மட்டுமே இந்த பாம்புகளை உயிருடன் பாதுகாக்க முடியும். சரியான வெப்ப நிலை இல்லை என்றால் இறந்துவிடும் தன்மை உள்ள ஊர்வன வகையை சேர்ந்தது இந்த பாம்புகள் இனம் ஆகும். குறிப்பாக பாம்புகள் அதிக வெயில் பட்டாலும் இறந்துவிடும்.

அதேபோல் அதிக குளிர்ச்சி இருந்தாலும் இறந்துவிடும் தன்மை உடையது. குறிப்பாக வெயில் காலங்களில் கீற்று கொட்டகையில், மண் பானைகளில் வைத்து ஒரளவு இதனை பாதுகாக்கலாம். அதிக குளிர்ச்சி மற்றும் பனிக்காலம், புயல், மழை போன்ற காலங்களில் இதனை சீரான வெப்ப நிலையில் வைத்து உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது கடினமான காரியம் என்று பாம்புகளை பராமரிக்கும் பழங்குடி இருளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை கோரத்தாண்டவமாடிய மாண்டஸ் புயலில் இருந்து இந்த வடநெம்மேலி பாம்பு பண்ணையில் இருந்த 729 விஷ பாம்புகளை பாதுகாக்க தங்கள் உயிரை பணயம் வைத்து பகல், இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து பாம்புகள் உள்ள தொட்டிக்குள் 5 பணியாளர்கள் (பழங்குடி இருளர்கள்) விழிப்புணர்வுடன் இருந்து புயல் கரையை கடக்கும் வரை ஒரு பாம்புகள் கூட இறக்காத வண்ணம் பாதுகாத்துள்ளனர். பாம்புகள் அடைக்கப்பட்டு வரிசை கிரகமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பானைகள் ஒன்றோடு, ஒன்று உரசி உடைந்து, சேதமடையாமல் இருக்க 2 பானைகளுக்கு இடையில் வைக்கோல் போட்டு தடுப்புகள் அமைத்து மழை, குளி்ர்காலங்களில் வீடுகளில் குழந்தைகளை சளி, இருமலில் இருந்து எப்படி நாம் பாதுகாக்கிறோமோ? அதே போல் பாம்புகளை தங்கள் குழந்தைகள்போல் எண்ணி தனி கவனம் செலுத்தி பாதுகாத்தனர்.

புயல் கரையை கடந்து ஓய்ந்தாலும், மறுபுறம் தற்போது குளிர்காலம் தொடங்குவதால் பாம்புகளை புயலில் இருந்து காப்பாற்றியது போல், குளிர்ச்சியான மண்பானைகளில் இருந்து காக்கும் மற்றொரு சவாலான பணியும் அவர்களுக்கு (பழங்குடி இருளர்கள்) தற்போது ஏற்பட்டுள்ளது.

அதிக குளிர்ச்சி தரும் திறந்தவெளி குடிசையில் மண்பானையில் உள்ள பாம்புகள் அதிக குளிரை தாங்காமல் இறக்கும் நிலை ஏற்படும் என்பதால், மண் பானையின் குளிர்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் மிதமான வெப்ப நிலையை ஏற்படுத்த அனைத்து மண் பானைகளுக்குள் வைக்கோல் போடப்பட்டு மிதமான வெப்ப நிலையில் தற்போது 729 பாம்புகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகை, மார்கழி, தை, மாதம் வரை கடும் குளிர் நிலவும் என்பதால் இந்த குறிப்பிட்ட மாதங்களில் பாம்புகளை மிதமான வெப்ப நிலையில் வைத்து பராமரிப்பது சவாலான காரியம் என்று பழங்குடி இருளர்கள் (பாம்பு பண்ணை பணியாளர்கள்) கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த பாம்பு பண்ணையில் கட்டுவிரியன், சுருட்டை விரியன் பாம்புகளை பொறுத்த வரையில் ஒரு மண் பானையில் 4 முதல் 5 பாம்புகள் வரை அடைக்கப்பட்டு இருக்கும். கண்ணாடி விரியன், கோதுமை நாகம், கருநாகம் உள்ளிட்ட பாம்புகள் தனித்தனி பானைகளில் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story