குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்
இளையான்குடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இளையான்குடி
இளையான்குடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சீரான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதை கண்டித்து இளையான்குடி-சாலைக்கிராமம் செல்லும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி தெற்கு கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செயின் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள், காவிரி கூட்டு குடிநீர் ஒரு வாரமாக வரவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கிராமத்திற்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வரவில்லை. எனவே, உடைப்பை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
அதில் சமாதானம் அடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.