கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ்முதல் 3 நாட்களில் 1¼ லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளனகலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதல் 3 நாட்களில் 1¼ லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமை திட்டம்
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்தார். அதோடு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில், மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இம்முகாமானது வருகிற 4.8.2023 வரை நடைபெற உள்ளது. இதில் 1,027 இடங்களில் நடந்து வரும் முகாமில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
1¼ லட்சம் விண்ணப்பங்கள்
முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் முதல் 3 நாட்களில் 1,26,769 விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 1,092 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களை சரிபார்க்கவும், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 2-ம் கட்ட முகாம் 5.8.2023 முதல் தொடங்கி 16.8.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கை வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.