மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 2-வது கட்ட விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது


மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 2-வது கட்ட விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது
x

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையொட்டி 2-வது கட்டமாக விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி தொடங்கியது.

ஈரோடு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையொட்டி 2-வது கட்டமாக விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி தொடங்கியது.

உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக வீடு, வீடாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1,000 கார்டுதாரர்களுக்கு குறைவாக உள்ள ரேஷன் கடைகளில் இருந்து முதல்கட்டமாக விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதற்கான விண்ணப்பமும், டோக்கனும் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாம் 24-ந் தேதி தொடங்கியது. டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியின் அடிப்படையில் பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கும் முகாமுக்கு சென்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். இந்த பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 177 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 77 அயிரத்து 352 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

568 ரேஷன் கடைகள்

இந்தநிலையில் 2-வது கட்டமாக விண்ணப்பங்கள், டோக்கன் வினியோகிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வினியோகம் செய்தனர். மேலும், எப்போது முகாமுக்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டுமென்ற டோக்கனையும் வினியோகம் செய்தனர். மாவட்டத்தில் 568 ரேஷன் கடைகளில் உள்ள கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் 544 இடங்களில் நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட விண்ணப்பம் வினியோகத்தின்போது விடுபட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story