மகளிர் தின விழா கொண்டாடி மகிழ்ந்த பெண்கள்


மகளிர் தின விழா கொண்டாடி மகிழ்ந்த பெண்கள்

திருப்பூர்

திருப்பூர்

உலகில் பெண்ணாக பிறந்தவர் தாய், மனைவி, தங்கை, தோழி, மகள் என்று நமது உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறப்படுவது இதனால் தான். ஒருவரின் சொந்த நாட்டை கூட தாய் நாடு என்று தான் நாம் அழைக்கிறோம். இதுபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமான அனைத்துக்கும் பெண்கள் பெயர் தான் வைக்கப்படுகிறது. அந்தளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அந்த பெண்களை போற்றும் வகையில் உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களின் உழைப்புக்கும், அவர்களின் உன்னதத்தை போற்றும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் பெண்கள் முதல் குடும்பத்தலைவிகள், மாணவிகள் வரை மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கயிறு இழுக்கும் போட்டி

அந்தவகையில் அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூரில் கட்சி அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவுக்கு மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளை முன்னின்று நடத்தினார். லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதி உடைத்தல், லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டியில் மகளிர் ஆர்வமுடன் பங்கேற்று ஆண்களுக்கு நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை போல் இரு அணியினர் மல்லுக்கட்டி கயிறு இழுத்தனர். அதுபோல் சிறுவர்களை போல் பலூன் ஊதி உடைக்கும் போட்டியில் பெண்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார்கள்.

வீட்டு உபயோக பொருட்கள் பரிசு

பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போட்டியில் பெண்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் பங்கேற்று விறு, விறுப்பாக ஓடிச்சென்று தண்ணீரை பாட்டிலில் நிரம்பினார்கள். இந்த போட்டிகள் பெண்களின் சிறுவர் மற்றும் இளமைப்பருவத்தை நியாபகப்படுத்துவதாக அமைந்தது. லக்கி கார்னர் போட்டியில் சிறுவர்களை போல் சுற்றி வந்து பங்கேற்றார்கள்.

இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கட்சியின் மாவட்ட இணை செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா சந்திரசேகர் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர். கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் அரிகரசுதன், பி.கே.எம்.முத்து, ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் அனைத்தும் முடிந்த பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

கேக் வெட்டினார்கள்

முன்னதாக எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பிரமாண்ட கேக் வெட்டி மகளிர் தின விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். இதில் மகளிர் அணி பொறுப்பாளர்கள் சரசு, வித்யா, மாலதி, பேபி சிவகாமி, அமுதா, கோமதி, மல்லிகா, முத்துலட்சுமி, தீபா, லீலா, இந்திராணி, ராணி, ரோகிணி, ராஜலட்சுமி, ஆனந்தி உள்பட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டனர்.

---


Next Story