திண்டுக்கல், நத்தத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்
திண்டுக்கல், நத்தத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல், நத்தத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தினவிழா
திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடியில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி செயலர் அருள்தேவி தலைமை தாங்கினார். முதல்வர் மேரி பிரமிளா சாந்தி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் சங்கமித்ரா, கோவை மனநல மருத்துவர் ஹெலன் சிவக்கொடி, திண்டுக்கல் இலக்கிய களம் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, வரலாற்றில் சாதனை படைத்த பெண்கள் மற்றும் இனிவரும் காலங்களில் பெண்கள் சாதனையாளர்களாக உருவாக தேவையான தகுதிகள் குறித்து பேசினர்.
பின்னர் கல்லூரி மாணவிகள் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதனை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். அதில், வேதியியல் துறை படைப்புகள் முதல் இடத்தையும், இயற்பியல் துறை படைப்புகள் 2-ம் இடத்தையும் பிடித்தன. விழாவில் ஏராளமான பெண்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
என்.பி.ஆர். கல்லூரி
இதேபோல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் உலக மகளிர் தினவிழா மற்றும் கருத்தரங்ம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு என்.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் எழிலரசி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், 'டிஜிட்டல் பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் பெண்களின் சிறப்பு, உலகில் பெண் சாதனையாளர்களின் பட்டியலை கூறி அவர்களின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கல்லூரி மாணவிகள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி பயின்று ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப உலகத்தில் அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் திகழ வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலட்சுமி மற்றும் மாணவிகள், பேராசிரியைகள் கலந்துகொண்டனர்.
தபால் அலுவலகம்
திண்டுக்கல்லில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் தின விழா, தலைமை தபால் அதிகாரி அழகர்சாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உலக மகளிர் தினத்தின் சிறப்பு குறித்து தபால் துறை அலுவலர்கள் பேசினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தபால் அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் திண்டுக்கல் பஸ் நிலைய தபால் அலுவலர் வெண்ணிலா நன்றி கூறினார்.