பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்


பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
x

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி பெண்கள் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் பெரியகுப்பம் மேம்பாலத்தின் கீழ் அரசு டாஸ்மாக் மதுப்பான கடைகள் 2 உள்ளது. இந்த மதுபான கடைகள் குடியிருப்புகள் மற்றும் கோவில்கள் அருகில் உள்ளது.

இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மது வாங்கி அதனை சாலையிலே அமர்ந்து அருந்திவிட்டு விழுந்து கிடக்கின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பெண்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதியுற்று வருகிறார்கள்.

போராட்டம்

எனவே திருவள்ளூர் பெரிய குப்பம் மேம்பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதை தொடர்ந்து நேற்று பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த பெண்கள் அந்த 2 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு உடனடியாக அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story