காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்
காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சாங்குளம் தங்கநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் தங்களுக்கு முறையான குடிநீர் வழங்ககோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் அருப்புக்கோட்டை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முறையான குடிநீர் இல்லாததால் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக பெண்கள் புகார் தெரிவித்தனர். விரைவில் குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.