தாலிக்கயிறை கையில் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம்
மதுக்கடையை அகற்றக் கோரி தாலிக்கயிறை கையில் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடையை அகற்றக் கோரி தாலிக்கயிறை கையில் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலிக்கயிறை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் தாலிக்கயிறை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமரைச்செல்வி தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்ட பெண்கள் தாலிக்கயிறை கையில் ஏந்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக் ஜேக்கப்பை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
உடனடியாக அகற்ற வேண்டும்
அந்த மனுவில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டையை அடுத்த புளியக்குடி மேலதோப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையால் தொடர்ந்து விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் அந்த சாலையில் சென்று வரும் மாணவிகள், பெண்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி இளம் விதவைகள் உருவாகி வருகின்றனர். உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அகற்ற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
ஆய்வு செய்ய உத்தரவு
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உடனடியாக டாஸ்மாக் அதிகாரிகளை நேரில் அழைத்து புளியக்குடி மேலதோப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.