குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
பழனி நகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பழனி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் வார்டுக்கு குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுவதில்ைல என்று புகார் கூறினர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள், பழனி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2-வது வார்டு பகுதியில் முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் தண்ணீர் வினியோகம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.