அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
வேங்கைவயலில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தும் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் கைது செய்யாமல் உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் சமத்துவ பொங்கல் எதற்காக கொண்டாட வேண்டும். இதனை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அதனை கேட்க தயாராக இல்லை. அமைச்சர்களிடம் எங்களுடைய குறைகளை நாங்கள் கூற வேண்டும். ஒருதலைபட்சமாக விசாரணையும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களிடம் இதுவரை போலீசார் விசாரணை செய்ய வில்லை. ஆனால் எங்களை குற்றவாளிகள் போல சித்தரிக்கின்றனர். உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்தும், இதுவரை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முற்படவில்லை.
வாக்குவாதம்
போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் எங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள், எங்களுக்கு எந்த விதமான அரசு சலுகைகளும் வேண்டாம் என்று பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அமைச்சர்களை பார்த்து விட்டு தான் நாங்கள் செல்வோம் என்று கூறி பெண்கள் அங்கே நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.