பெண்கள், சாலையில் நாற்றுநடும் போராட்டம்
பெண்கள், சாலையில் நாற்றுநடும் போராட்டம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரபாண்டியம் மேலத்தெரு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விக்கிரபாண்டியம் பிள்ளையார் கோவிலடியில் இருந்து, இவர்கள் வசிக்கும் தெரு வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்பாடின்றி உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் அவசர காலங்களில் தீயணைப்பு துறை வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதில்லை. இதனால் அவசரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்ைக எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று சாலையை சீரமைக்கக்கோரியும், சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்தும் விக்கிரபாண்டியம் மேலத்தெரு கிராம மக்கள் மற்றும் பெண்கள் சாலையில் நாற்றுநட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.