காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டம்


காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டம்
x

காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டம்

திருவாரூர்

குடிநீர் வழங்கக்கோரி திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி

திருவாரூர் ஒன்றியம் அடியக்கமங்கலம் ஊராட்சி 12-வது வார்டில் உள்ள நெடுங்குடி, சித்தாநல்லூர், கீழத்தெரு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கான குடிநீர் தேவையை அடியக்கமங்கலம் ெரயில்வே கேட் அருகில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் இருந்து அப்பகுதி மக்கள் பெற்று வருகின்றனர்.

குடிநீர் குழாயில் அடைப்பு

கடந்த ஒரு சில மாதங்களாக சித்தநல்லூர், கீழத்தெரு, நெடுங்குடி ஆகிய பகுதிகளுக்கு வரும் ஊராட்சி குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சரிவர குடிநீர் வருவதில்லை. அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து நெடுங்குடி ெரயில்வே கேட் அருகில் தண்ணீர் பிடித்து செல்லக்கூடிய சூழல் நிலவி வருகிறது. அதேபோல் ஆண்கள் இருசக்கர வாகனங்களில் குடங்களில் கயிறை கட்டி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலைமறியல்

நேற்று காலிக்குடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவாரூர்-நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பாளையம் என்கிற இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என போராட்டக்காரர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story