தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலபேரி பஞ்சாயத்து அதிசயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'தங்களது பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில் உள்ளது. அந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து 10 நாட்களாக புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது' என்றனர்.
கலெக்டரிடம் மனு
பின்னர் அவர்களிடம் போலீசார் சமரசம் செய்து, கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுக்கும்படி கூறினார்கள். இதையடுத்து சிலர் மட்டும் அலுவலக வளாகத்திற்குள் சென்று கோரிக்கை மனுவை கொடுத்துச் சென்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி, இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் அகரகட்டு லூர்து நாடார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.